மட்டக்களப்பு மாநகர வீதிகள் விஸ்தரிப்பு; பொதுமக்களுடனான கலந்துரையாடல்

2020-07-22

மட்டக்களப்பு மாநகர வீதிகளின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கோடு மாநகரசபைக்குட்பட்ட 5 வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பதற்கான செயற்திட்டங்களை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை (22) மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.சிவநாதன் அவர்கள், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியிலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது பணியில் இருந்து ஒய்வு பெறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.சிவநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் கடமையினை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த வீதிகளை பார்வையிட களவிஜயம் ஒன்றினையும் மேற்கொண்டனர். அதனடிப்படையில் நகர மத்தியிலே உள்ள பன்சலை வீதி, பிள்ளையாரடி வேளான்குடா வீதி, அருணகிரி வீதி, கிழக்கு பல்கலைக்கழக வீதி மற்றும் கல்லடி மயான வீதி என்பன அகலப்படுத்தப்பட்டு புனரமைக்கப்படவுள்ளன.

குறித்த வீதிகளில் விஸ்தரிப்பதற்கான அளவீடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு குறித்த வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்குமான கூட்டம் வெள்ளிக்கிழமை இன்று (24) மாநகரசபையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்.. அவர்கள் குறித்த வீதிகள் அகலமாக்குவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ளனர் என்றும். வீதி அகலமாக்கும் போது இடி படுகின்ற வேலி-மதில்கள் மாநகர சபையின் அனுமதியுடன் கட்டப்பட்டிருந்தால் அதனை மீளக் கட்டிக்கொடுக்கப்படும் என்றும்

கடந்த காலத்தில் அருணகிரி லேன் ஒருபகுதி அகலமாக்கப்படும் போது அவர்களுக்கு சபை அனுமதியுடன் பத்து வருடகாலம் சோலை வரி விலக்களிப்பு செய்யப்பட்டது போன்று இவ் வீதிகளின் விஸ்தரிப்பின் போதும் பொதுமக்களுக்கு சபை அனுமதியுடன் சோலை வரி விலக்களிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் முதல்வர் தி.சரவணபவன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், சுகாதார அதிகாரி மற்றும் குறித்த வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks